×

ஓட்டுநர் உரிமம், வாகனம் சார்ந்த 31 முக்கிய சேவைகளை இணைய வழியில் பெறலாம்: போக்குவரத்துதுறை அதிகாரிகள் தகவல்

சென்னை: ஓட்டுநர் உரிமம், வாகனம் சார்ந்த 31 முக்கிய சேவைகளை இணையவழியில் பெற முடியும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டில் வாகனப் பதிவு, வாகனங்களை இயக்குவதற்கான ஓட்டுநர் உரிமம், நாடு முழுவதும் வாகனத்தை கொண்டு செல்வதற்கான பர்மிட் உள்ளிட்ட பல்வேறு தேவை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இச்சேவைகளை பெற மக்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய சூழல்் ஏற்படுகிறது. இதையடுத்து சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் சார்பில் கடந்த ஆண்டு போக்குவரத்து தொடர்பான 58 சேவைகள் ஆன்லைனில் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தற்போது பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பித்தல், ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம், சொந்த பயன்பாட்டு வாகனங்களின் உரிமையாளர் பெயர் மாற்றம் செய்தல் உள்ளிட்ட 6 சேவைகள் வழங்கபட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், ஆதார் அட்டையை ஆவணமாக கொண்டு வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரடியாக வராமலேயே ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப்பதிவு தொடர்பான 42 சேவைகளை இணையதளம் மூலம் பொதுமக்கள் பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக 42 சேவைகளை இணையவழியில் பெறுவதற்கு போக்குவரத்துறை கடந்த மே மாதம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து கூடுதலாக 42 சேவைகள் ஆதார் அட்டையை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் பெற வழிவகை செய்யப்பட்டது. தற்போது ஓட்டுநர் உரிமம், வாகனம் சார்ந்த 31 சேவைகளை இனி இணைய வழியில் பெறலாம் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள 91 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும், 54 வாகன போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகங்களிலும் பொதுமக்கள் தங்களது சேவைகளை எவ்வித சிரமமும் இன்றி பெறும் வகையில், கணினிமயமாக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்ந்த 48 சேவைகளில் முதற்கட்டமாக ஏற்கனவே ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம், பழகுநர் உரிமம் பெறுதல் உள்ளிட்ட 6 சேவைகள் முற்றிலுமாக இணைய வழியில் கொண்டு வரப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. மீதமுள்ள 42 சேவைகளும் இணைய வழியில் கொண்டு வரப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார். அந்த வகையில், தற்போது 25 சேவைகள் முழுக்க முழுக்க இணைய வழியில் கொண்டு வரப்பட்டுள்ளன.

அதன்படி, நகல் பழகுநர் உரிமம், நகல் ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிமத்தில் பெயர் மாற்றம், பன்னாட்டு ஓட்டுநர் உரிமம், வாகனத்துக்கான தற்காலிக பதிவெண், அனுமதி சீட்டில் பெயர் மாற்றம், அனுமதி சீட்டை ஒப்படைத்தல் போன்ற 25 சேவைகளை முற்றிலும் இணைய வழியில் மட்டுமே பெற முடியும். மீதமுள்ள 17 சேவைகளையும் இணைய வழியில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தேசிய தகவல் மையம் எடுத்து வருகிறது. சேவைகளை பெறுவதற்கு ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சரியாக இருப்பதை பொதுமக்கள் உறுதி செய்ய வேண்டும். விவரங்கள் மாறுபட்டிருந்தால் சேவையை பெற இயலாது. தற்போது அமலுக்கு வந்துள்ள 31 சேவைகளையும் https://tnsta.gov.in என்ற போக்குவரத்து ஆணைய இணைய தளத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறினர்.

The post ஓட்டுநர் உரிமம், வாகனம் சார்ந்த 31 முக்கிய சேவைகளை இணைய வழியில் பெறலாம்: போக்குவரத்துதுறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Department of Transportation ,Chennai ,Dinakaran ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...